வேலை என்பதன் எதிர்ச்சொல் மனவுளைச்சல்
"நான் எப்போதும் வேலை செய்து கொண்டேயிருப்பேன்.
அவர்களுக்கு அது வேலை போல் தோன்றும்.
எனக்கோ அது குதூகலம் தரும் விளையாட்டு."
என்கிறார் நவால் ரவிகாந்த்.
நான் படைப்புக்களை உருவாக்கி வெளியிடும் போது,
"இது அற்புதமாக இருக்கிறதே! இதனை உருவாக்க நிறைய வேலை செய்திருப்பீர்கள் - அற்புதம்"
என்று பலரும் சொல்வதுண்டு.
ஆனால், நான் படைத்தலில் திளைத்திருக்கும் போது,
அதை உருவாக்குவதன் படிமுறையை அப்படியே குதூகலம் தரும் விளையாட்டாகவே காண்கிறேன்.
தமிழ் எழுத்து வடிவங்களை வித்தியாசமான வகையில் எழுதி பார்ப்பதில் காலம் கடப்பதையே மறப்பேன்.
இந்தப் பதிவுகளை எழுதும் போது, எனது எண்ணமெல்லாம் இந்த நொடியிலே தங்கியிருக்கும்.
வாசிப்பதற்கு நூலொன்றை கவனத்தில் எடுத்தால், அதை மனத்தில் ஏற்றும் வரைக்கும் உலகமே அங்கே இருக்கும்.
இதுதான் படைத்தல் தருகின்ற பரவசம்.
இங்கு செயல்தான் அத்தனை யோசனைகளுக்கும் வேலைகளுக்கும் தெரிவுகளுக்கும்
பொருத்தமான முகவரியைத் தருகிறது.
நீங்கள் செய்வதை விரும்பிச் செய்தால் மகிழ்ச்சி மனத்தில் நிறையும்.
வேலை என்பது குதூகலம் தரும் விளையாட்டாக உருவாகும்.
அதனால் எப்போதும் வேலை செய்வதற்கான அவகாசம் தோன்றும்.
வேலை என்பதன் எதிர்ச்சொல் மனவுளைச்சல்.
தாரிக் அஸீஸ்
இந்த மடலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.