இன்று உலக அழிறப்பர் தினம்.
1770ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி, மரக்கறியில் காணப்படுகின்ற ஒரு வகை பசையால்,
பென்சிலின் தடயங்களை அழிக்க முடியும் என ஜோசப் பிரிஸ்ட்லி கண்டறிந்தார்.
அந்தப் பசையை அவர் "றப்பர்" என்று வழங்கினார்.
அந்த ஆண்டில் எட்வர்ட் நெய்ர்ன், அழிறப்பரை உருவாக்கி சந்தைப்படுத்தினார்.
சார்ல்ஸ் குட்இயர், 1839இல் வல்கனைசேசன் என்கின்ற றப்பரை பதப்படுத்தி பாதுகாக்கும் முறையைக் கண்டறிந்தார்.
இதன் வாயிலாக, அழிறப்பருக்கு அடையாளமும் ஆயுளும் கிடைத்தது.
1858இல் கைமன் லிப்மன் என்பவரால் பென்சிலின் அந்தத்தில் அழிறப்பர் பொருந்திய வகையிலுள்ள மாதிரிக்கு பேடன்ட் அனுமதிப் பத்திரம் பெறப்பட்டது.
தவறுகள் நிகழும். நிகழலாம்.
அழிறப்பரால் எல்லாத் தவறுகளையும் அழிக்க முடிவதில்லை.
அழிறப்பர் கொண்டு அற்புதமான ஓவியம் செய்த ஓவியர் பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.
1950களில் வளர்ந்து வரும் கலைஞராகவிருந்த ரோபட் ரோசன்பேர்க், வெறுமையை ஓவியமாக வரைய எத்தனிக்கிறார்.
வெறுமையான தாள்களை கண்காட்சியாக ஒழுங்கமைக்கிறார்.
மக்களின் ஆர்வம் அதன்பால் இல்லை என்பதை உணர்கிறார்.
ஆனாலும், வெறுமையை வரையலாம் என்ற தன் எண்ணத்தில் உறுதியாகவிருந்து,
தான் ஒன்றை வரைவதும் அதனை அழித்து அங்கு வெறுமையை உருவாக்குவதுமாய் தன் கலையைத் தொடர்கிறார்.
ஆனால், யாருமே அறியாத ஒருவர், தனது ஓவியத்தை வரைந்து அழித்துவிடுவதால்,
அதற்கு வெறுமையைத் தவிர வேறெந்தச் சிறப்பும் வரப்போவதில்லை என்பதை உணர்கிறார்.
1950களில், பிரபலமான ஓவியராகத் திகழ்ந்த வில்லெம் டி கூனிங்கின் கலையகத்திற்கு ரோசன்பேர்க் செல்கிறார்.
கலையகத்தின் கதவைத் தட்டுகிறார்.
இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள்.
கூனிங் அவரை வரவேற்கிறார்.
தான் வெறுமையை ஓவியமாக்க முனைவதையும், அதற்கு கூனிங்கிடம் ஓவியமொன்றைத் தருமாறும்,
தனது முயற்சிகளின் பதிவுகளை ரோசன்பேர்க் பகிர்கிறார்.
"எனக்கு இதில் விருப்பமில்லை, ஆனாலும், இந்த யோசனையை என்றால் புரிந்து கொள்ள முடிகிறது"
என்று சொல்லி, ஓவியமொன்றைத் தர ஒப்புக் கொள்கிறார்.
தனது முக்கியமான ஓவியங்களில் ஒன்றை, ரோசன்பேர்கிடம் வழங்க தனது காப்பகத்தில் தேடுகிறார்.
"எனக்கு மிக அழகான ஓவியம் வேண்டாம். ஆச்சரியம் தரும் ஓவியம் வேண்டாம்.
நீங்கள் இழந்து தவிக்கப் போகின்றதான ஓர் ஓவியமும் வேண்டாம். சுமாரான ஓர் ஓவியமே போதும்." என்கிறார் ரோசன்பேர்க்.
ஈற்றில் கூனிங், "உங்களுக்கு அழிக்க மிகக் கடினமாயிருக்கும் இந்த ஓவியத்தை தருகிறேன்"
என்று பென்சில், பேனா, மை, கரி என பல நிறமூலங்களால் உருவான ஓவியத்தை ரோசன்பேர்க்கிடம் தருகிறார்.
"எனக்கு அந்த ஓவியத்தை அழித்துவிட ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் எடுத்தது.
எத்தனை அழிறப்பர்களை பாவித்தேன் என்றே ஞாபகம் இல்லை",
என்று தனது நினைவுகளை பகிர்கிறார் ரோசன்பேர்க்.
இந்த இரு கலைஞர்களும் உலகை விட்டும் மறைந்து விட்டார்கள்.
ஆனால், அவர்களால் உருவான வெறுமை ஓவியம் இன்றும்,
சான் பிரான்சிஸ்கோ நவீன கலை அருங்காட்சியகத்தில் காட்சியாகிறது.
அந்த ஓவியத்தில் எதுவேமில்லை வெறுமையைத் தவிர.
அதன் கீழே இப்படி ஒரு வாசகம் இருக்கிறது
"அழிக்கப்பட்ட டி கூனிங்கின் ஓவியம் - ரோபர்ட் ரோசன்பேர்க் 1953"
அழிறப்பர் கொண்டு அழித்து ஓவியம் செய்தது போல்,
உடைந்த மட்பாத்திரங்களை தங்கத்தால் இணைத்து ஒட்டி அழகாக உருவாக்கி,
ஜப்பான்காரன் அதற்கு கின்ட்ஸ்சுகி என்று பெயரும் வைத்துள்ளான்.
இங்கு எதையும் யாராலும் அழிக்க முடியாது.
அது இன்னொன்றாய் மாறிக் கொண்டேயிருக்கும்.
வைரஸ்களைப் போல்.
தாரிக் அஸீஸ்
15.04.2023
வரைதமிழ் - தமிழ் எழுத்துகளை அழகாகவும் வினைத்திறனாகவும் எப்படி வரையலாம் என்பதை கற்றுத் தருகின்ற குழுநிலை பயிற்சி பட்டறையின் மே 2023 இற்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. விபரங்கள் இங்கே. பட்டறையில் சந்திப்போம்.
இந்த மடல் பற்றிய உங்கள் கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்வதன் மூலம் எனக்கு சொல்லி அனுப்பலாம். நன்றி.
மற்றுமொரு மடலில் சந்திப்போம்.